பால.ரமேஷ்.
*தினம் ஒரு குட்டிக்கதை* .
சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.
ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம்
உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக
கலந்து கொடு,ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -
என்று கூறினார்.மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய லீ லீ மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள்.
அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய்
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த
நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து
இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்.
நன்றி : பால . ரமேஷ்
No comments:
Post a Comment